உண்ணாவிரத போராட்டத்தில் மயக்கம் மகளிர் ஆணையத் தலைவி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில், ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் டிஷா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொல்லபட்டார்.  இதேபோல், உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் தீ வைத்து எரித்து கொன்றனர்.

 

இந்நிலையில், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு 6 மாதத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் தலைநகர் டெல்லியில் கடந்த 3ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அவருடைய உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் வலியுறுத்தியும், அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டார். தொடர்ந்து, 13வது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த அவர் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார். உடனடியாக, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: