வடகிழக்கு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று குடியுரிமை சட்டத்தில் மாற்றம் செய்ய முடிவு: அமித்ஷா மறைமுக பேச்சு

ராஞ்சி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இந்தியா வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் தங்கியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இந்து மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கான குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வன்முறை வெடித்துள்ளது. அசாமில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யும்படி மத்திய அரசை இம்மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், கிரித்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,  ‘‘மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவும், அவருடைய அமைச்சர்கள் சிலரும் கடந்த வெள்ளிக்கிழமை என்னை சந்தித்து பேசினர். அப்போது, குடியுரிமை சட்டத்தால் தங்கள் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர்கள், இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தனர். இந்த சட்டத்தால் எந்த பிர்சனையும் வராது என அவர்களுக்கு புரிய வைக்க முயன்றேன். இருப்பினும், அவர்கள் மாற்றம் செய்யும்படி கேட்டு கொண்டனர். கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு என்னை சந்திக்கும்படியும், அப்போது இச்சட்டம் பற்றி ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம் என்றும் அவர்களிடம் கூறி அனுப்பினேன்,’’ என்றார்.

இதே மாநிலத்தில் தன்பாத் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ‘‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்ததுமே, காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு விட்டது. அதனால்தான், இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநில மக்களிடையே வன்முறையை தூண்டி விட்டுள்ளது. எங்கள் கட்சி இந்து - முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என அக்கட்சி கூறுகிறது. உண்மையில் அதுதான், இந்து - முஸ்லிம் அரசியலை செயது வருகிறது. நக்சலைட் தீவிரவாதத்தை தூண்டி வருகிறது,’’ என்றார்.

Related Stories:

>