படை வீரர்களுக்காக திருமண வெப்சைட் துவங்கியது: இந்தோ-திபெத் எல்லை போலீஸ்: துணை ராணுவ வரலாற்றில் முதல் முறை

புதுடெல்லி: துணை ராணுவ படையில் முதல் முறையாக, தங்களின் வீரர்களுக்காக திருமண வெப்சைட்டை இந்தோ -திபெத் எல்லை போலீஸ் தொடங்கியுள்ளது. துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படையினர் இந்திய-சீன எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றும் இந்தப் படையில் திருமணம் ஆகாத ஆண்கள் 2,500 பேரும், பெண்கள் ஆயிரம் பேரும் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். தொலை தூரங்களில் ஆபத்தான இடங்களில் பணியாற்றும் இவர்களுக்கு வரன் தேடுவது, இவர்களின் குடும்பத்தினருக்கு சிரமமான காரியமாக உள்ளது. இதனால், பல ஆண், பெண் வீரர்களுக்கு திருமணமாகும் வயது அதிகரித்து கொண்டே போகிறது. இது, இந்தோ - திபெத் எல்லைப்படை உயர் அதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.

அதனால், தங்கள் படைக்குள்ளேயே பொருத்தமான ஜோடிகளை தேடுவதற்கு திருமண வெப்சைட் ஒன்றை உருவாக்கும்படி, தகவல் தொழில்நுட்ப பிரிவிடம் இப்படையின் இயக்குனர் ஜெனரல் தேஸ்வல் ஆலோசனை அளித்தார். அதன்படி, இந்த வெப்சைட் கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கான லிங்க் ஐடிபிடி வெப்சைட்டிலேயே உள்ளது. இதில், ஒரு வீரரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால், பாதுகாப்பான முறையில் எந்தவித முறைகேடுகளுக்கும் வழிவகுக்காமல் பொருத்தமான ஜோடியை தேட இந்த வெப்சைட் வழி வகுத்துள்ளது.

வீரரின் பதவி, சொந்த ஊர், எப்போது பணியில் சேர்ந்தார், தற்போது எங்கு பணியாற்றுகிறார், அவரது புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் உள்ளன. இதில், எந்த தகவலையும் யாரும் மாற்ற முடியாது. போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை தெரிவிக்கும் வசதியை மட்டும் வீரர்களின் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை 150 வீரர்கள் இந்த வெப்சைட்டில் தங்கள் விருப்பத்தை பதிவு செய்துள்ளனர். தகுதியான திருமணம் ஆகாத வீரர்கள், விதவையானவர்கள், விவாகரத்து பெற்ற வீரர்கள் இந்த வெப்சைட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும் என இப்படையின் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த வெப்சைட் மூலம் வாழக்கைத் துணையை தேடுவது எந்த கட்டாயமும் இல்லை. இப்படையில் தற்போது 333 ஆண், பெண் வீரர்கள் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் பணியாற்றவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்தோ-திபெத் படையில் உள்ள திருமணமாகாத ஆண், பெண் வீரர்களுக்கு இந்த வெப்சைட் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

மற்ற படைகளிலும்தொடங்கப்படுமா?

இந்த வெப்சைட் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரே படைக்குள் பணியாற்றுபவர்கள் தங்கள் பொருத்தமானவர்களை தேடிக்கொள்வதற்கான நல்ல திட்டம் இது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்ற மத்திய போலீஸ் படைப்பிரிவுகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி மொத்தம் 10 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 2.5 லட்சம் பேர் திருமணம் ஆகாதவர்கள்,’’ என்றார். இத்திட்டம் வெற்றி அடைந்தால், அனைத்து துணை ராணுவப் படைகளும், பல மாநில காவல்துறைகளும் திருமண வெப்சைட் திட்டத்தை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.

Related Stories:

>