குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தது கூட்டணி தர்மத்துக்காகத்தான் : ராமதாஸ் விளக்கம்

சென்னை: பாஜவுடனான கூட்டணி தர்மத்துக்காகத்தான் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். அதேநேரத்தில் ஈழத்தமிழர்களை அங்கீகரிக்கவேண்டும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு அல்ல. பாஜவுடனான கூட்டணியில் நாங்கள் இருப்பதால், கூட்டணி தர்மம் என்ற வகையில் ஆதரித்தோம். கூட்டணியில் இருக்கும்போது, எந்தவித மசோதாவாக இருந்தாலும் ஆதரித்துதான் ஆகவேண்டும். அதனால் ஆதரித்தோம். அதேநேரத்தில் இந்த மசோதா பற்றி, கூட்டணியில் விவாதித்துத்தான் முடிவெடுத்திருக்கிறோம். அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், முன்பே முடிவெடுத்து விட்டோம். எனவே அமைச்சர் பதவி கொடுத்தாலும் வேண்டாம் என்போம். அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று கூறிவிடுவோம்.

Related Stories: