திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த உத்திராபதி அவருடைய மனைவி சங்கீதா, மகள் அபிநயலட்சுமி மற்றும் சிறுவன் ஆகாஷ்.  இவர்கள் நால்வரும் கடந்த 11ம் தேதி திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லக்கூடிய குருவாயூர் எஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளனர். பிற்பகல் 3மணியளவில் கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்பு சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு சுமார் 1மணியளவில் இவர்கள் நால்வரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. பின்பு அவ்வழியே சென்ற சிலர் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதற்கட்டட விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்யவதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட விவரங்களை தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே சமயத்தில் இவர்கள் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் அவர்களுடைய ஆவணங்களாக ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தால் உடல்கள் சிதறி முகம் சிதைந்துள்ளதால் ஆதார் கார்டில் உள்ளவர்கள் இவர்கள் தானா என்பதை உறுதி செய்ய போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுடைய உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: