மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீடு நீட்டிப்புக்கு மாநிலங்களவையில் ஒருமனதாக ஆதரவு: ஆங்கிலோ-இந்தியன் ஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு

புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 70 ஆண்டு கால இட ஒதுக்கீடு அடுத்த மாதம் 25ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கவும், ஆங்கிலோ இந்தியன் ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த 10ம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், ‘‘எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் நலத்திற்கு, அந்தப் பிரிவைச் சாராதவர்களும் உதவி செய்துள்ளனர். நாம் எஸ்.சி, எஸ்.டி உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளோம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் நலனுக்காக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பிர்சா முண்டா ஆகியோர் பணியாற்றி உள்ளனர். நாட்டில் ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் 296 பேர் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கான ஒதுக்கீடு நீட்டிக்கப்படவில்லை. இந்த மசோதாவை உறுப்பினர்கள் ஒரு மனதாக ஆதரிக்க வேண்டும்,’’ என்றார்.

திரிணாமுல் எம்.பி டெரிக் ஓ பிரைன், ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், அவர் திரிணாமுல் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி.யாக உள்ளார். இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், ‘‘இந்த இட ஒதுக்கீடு சலுகை எனது சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு நீட்டிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. ஆங்கிலோ இந்தியன் பிரிவில் இருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரே எம்பி நான்தான்’’ என்றார். மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி குபேந்திர ரெட்டி பேசுகையில், ‘‘பெங்களூரு, மங்களூரில் மட்டுமே ஆங்கிலோ இந்தியன்கள் 2 ஆயிரம் பேர் முதல் 3 ஆயிரம் பேர் வரை உள்ளனர். ஆங்கிலோ இந்தியன் மக்கள் தொகையை அரசு மீண்டும் சரி பார்க்க வேண்டும்,’’ என்றார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, திமுக, ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஆங்கிலோ இந்தியன் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories: