குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு விரைந்தது ராணுவம்: அசாமில் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு 5000  ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நேற்று முன்தினம் பந்த் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அசாமில் நேற்று பந்த் அறிவிப்புகள் ஏதும் இல்லாத நிலையிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன. திப்ரூகரில் பொதுமக்கள் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியால் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். இதில் நிருபர் ஒருவர் காயமடைந்தார்.

ஜோர்ஹட், கோலாகட், தின்சுகியா, சிவசாகர், நாகோன், போன்கய்கான், சோனிட்பூர் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்துள்ளது. ரயில் மறியல் காரணமாக, 14க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் அசாமின் கவுகாத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அசாம் காவல்துறை இயக்குனர் ஜெனரல் பாஸ்கர்ஜோதி மகந்தா தெரிவித்தார்.

இந்நிலையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு 5000 ராணுவ வீரர்கள் நேற்று விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.இதற்காக, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் காரணமாக காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 20 கம்பெனி  ராணுவத்தினர் திரும்ப பெறப்பட்டுள்ளனர். இதேபோல் பிற இடங்களில் இருந்தும் 30 கம்பெனி  ராணுவ வீரர்கள் பெறப்பட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பொதுமக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்காகவே அங்கு ஏராளமான ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

Related Stories: