தடையின்றி இனி தண்ணீர் கிடைக்கும் காவல்கிணறில் கால்வாய்களை சீரமைக்கும் இஸ்ரோ

பணகுடி : காவல்கிணறு பகுதி குளங்களுக்கு தண்ணீர் செல்லும் நீரோடைகளை  இஸ்ரோ சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அரசு சார்ந்த பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஒரு பகுதியில் அமைந்தால் அங்கு வேலைவாய்ப்பு, புதிய திட்டங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் காவல்கிணறு மகேந்திரகிரி மலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. மகேந்திரகிரி மலையில் இருந்து காவல்கிணறு பகுதி குளங்களுக்கு செல்லும் தண்ணீர் இஸ்ரோ நிறுவனம் கட்டிய தடுப்புச் சுவர்களால் அடைபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இப்பகுதியில் வறட்சி தாண்டவமாடியதுடன் விவசாயமும் கேள்விக்குறியானது.

இதனால் நீர் வரும் கால்வாய்களில் உள்ள அடைப்பை இஸ்ரோ சீர் செய்து தடையின்றி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பலகட்டங்களாக போராட்டங்கள் நடந்தன. நிலத்தடி நீர்மட்டம், பல நூறு அடிக்கு கீழ் சென்றதால் இப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்ைக மேற்கொண்டனர். இதனால் சில குளங்களுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரின் நடவடிக்கையால், மகேந்திரகிரி மலையில் இருந்து குளங்களுக்கு நீர்வரும் கால்வாய்களை சீரமைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது.

இதுகுறித்து காவல்கிணறு நீர்நிலை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்கிணறு, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தாண்டவமாடியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க குழு அமைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொடர் நடவடிக்கையால் 2 ஆண்டுகளாக விநாயகர் புதுக்குளம், மணிமாலை புதுக்குளம், பெருமாள்குளம், சிவகாமி புதுக்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. நெல்லை அண்ணா பல்கலைக்கழக உதவும் கரங்கள், முன்னாள் டீன் சக்திநாதன், மாணவர்களும் கடந்த 6 மாதமாக களமிறங்கி இஸ்ரோ நிறுவனத்தால் பராமரிக்கப்படாத நீர்வரத்து கால்வாயை அளவிட்டனர்.

கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசும், இஸ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அவர்களே முன்வந்து காவல்கிணறு விலக்கிலுள்ள மலர்சந்தை வழியாக தண்ணீர் வெளியேறும் பாதை சரி செய்யப்பட்டது. இதனால் மணிமாலை புதுக்குளம், விநாயகர் புதுக்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதி குளங்களுக்கு தண்ணீர் செல்லும். இதனால் 600 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றனர். தொடர்ந்து மற்ற கால்வாய்களும் சீரமைக்கப்பட்டால், தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீர்வழி பாதை தொடர்ந்து சீரமைக்கப்படும்

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறுகையில், சிவகாமி புதுக்குளம், விநாயகர் புதுக்குளத்துக்கு வரும் சேனல் பாதைகள் சீரமைக்கப்படுகின்றன. இங்கு நீர்வரும் பாதை மேலும் சீரமைக்கப்படும். தண்ணீர் கீழ்பகுதிக்கு தடையின்றி வர இஸ்ரோ சார்பில் சேனல் கட்டி பாதை அமைத்துள்ளனர். இந்தாண்டு அதிக மழையால் தண்ணீர் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளிலும் காவல்கிணறு சுற்றுவட்டார பகுதிகளுக்கு தடையின்றி  தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடரும். எதிர்காலத்தில் அனுமன்நதி பாதைகளும் சீரமைக்கும் திட்டம் உள்ளது என்றனர்.

Related Stories: