பாஜ.வின் வழக்குகள் எனக்கு பதக்கம்: ராகுல் பேச்சு

வயநாடு: ‘‘பாஜ அரசு  என் மீது தொடர்ந்துள்ள வழக்குகள் ராணுவ வீரர் களுக்கு அணிவிக் கப்படும் பதக்கங்களை போன்றது.’’ என ராகுல் கூறியுள்ளார். கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு மாணவி ஒருவர் பாம்பு கடித்து பலியானார்.

இந்நிலையில் வயநாடு வாண்டூர் பகுதியில் உள்ள பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக, ராகுல் நேற்று வந்தார். அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:மாணவர்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களையும் ஏற்க வேண்டும். அடுத்தவர்களின் கருத்துக்களை ஆர்வமுடன் கேட்டால்தான் நீங்கள் உண்மையிலேயே அறிவியல் பூர்வமாக இருக்க முடியும். ஒரு குழந்தை அடுத்தவருக்கு தீங்கு நினைப்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க முடியாது.குழந்தைகளுக்கு இயற்கையாகவே அறிவியல் அறிவு உள்ளது. இந்த அறிவியல் ஆய்வு கூடத்தை மாணவர்கள் வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும். உங்களில் சிலர் அரசியல்வாதியாகவும், டாக்டர்களாகவும், வக்கீல்களாகவும் ஆகலாம். ஆனால், அறிவியல் ஆர்வத்தை நீங்கள் கைவிடக் கூடாது. அடுத்தவர்களின் கருத்துக்களை பாராட்டுவதுதான் அறிவியலின் அடிப்படை. நாம் மக்களின் குரலை நம்புகிறோம். ஆனால், மோடி தனது சொந்த குரலை நம்புகிறார். பணமதிப்பிழப்பு பற்றி அவர் கடைக்காரரிடமோ அல்லது விவசாயிகளிடமோ கருத்து கேட்கவில்லை. நாட்டின் மிகப்பெரிய பலமான பொருளாதாரத்தை மோடி அழித்து விட்டார். பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதத்துக்கு சென்று விட்டது.

ஐமு கூட்டணி அரசு 10 முதல் 15 ஆண்டுகளாக உருவாக்கிய பொருளாதாரத்தை அவர் அழித்து விட்டார். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கற்பனையில் வாழ்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சை பள்ளியின் பிளஸ் 2 மாணவி சபா மலையாளத்தில் மொழிபெயர்த்து கூறினார். அவரது துல்லியமான மொழிபெயர்ப்பு பெரும் பாராட்டை பெற்றது. சமூக வலைதளங்களில் தற்போது அது வைரலாகி  பரவி வருகிறது.இந்நிகழ்ச்சிக்குப்பின் ராகுல் அளித்த பேட்டியில், ‘‘வயநாட்டில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் பாம்பு கடித்து பலியானார். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இங்குள்ள பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த கேரள அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும்’’ என்றார்.

வன்யம்பலத்தில் நடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘நாடு முழுவதும் என் மீது 15 முதல் 16 வழக்குகளை பாஜ பதிவு செய்துள்ளது. நீங்கள் ஒரு ராணுவ வீரரை பார்க்கும்போது, அவர் பல பதக்கங்களை அணிந்திருப்பார். அதுபோல் என் மீது போடப்பட்டுள்ள  ஒவ்வொரு வழக்கும், ஒரு பதக்கம் போன்றது. அதிகமான வழக்குகள் அதிக மகிழ்ச்சியே. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் பாகுபாட்டை காங்கிரஸ் எதிர்க்கிறது.  அதை நாடாளுமன்றத்தில் நாங்கள் எதிர்ப்போம்’’ என்றார்.

வெங்காய விலை ஏற்றத்துக்கு இதுதான் பதிலா?

வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்ற பிரச்னையை நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை எழுப்பிய எம்.பி ஒருவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்து நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா? என கேட்டார். இதற்கு பதில் அளித்த நிர்மலா, ‘‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பத்தை சேர்ந்தவர்’ என பதில் அளித்தார். இது குறித்து கேரளாவில் கிண்டலடித்த ராகுல், ‘‘நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா இல்லையா என யாரும் கேட்கவில்லை. நீங்கள் நிதியமைச்சர். பொருளாதாரம் ஏன் இப்படி தள்ளாடுகிறது என்றுதான் நாங்கள் கேட்கிறோம்? மிக ஏழையான நபரிடம் கேட்டால் கூட, அவர் உணர்வு பூர்வமான பதில் அளிப்பார்’’ என்றார்.

Related Stories: