வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு

நாக்பூர்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, ஜன.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்ந விஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, வழக்கறிஞர் சதிஷ் உகே, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
Advertising
Advertising

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, பட்நவிசின் நாக்பூர் வீட்டிற்கு, கடந்த வாரம், ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. இந்நிலையில், நேற்று, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்நவிஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதய் தாப்லே, ‘’தவிர்க்க முடியாத காரணங்களால், பட்நவிஸ் நேரில் வர முடியவில்லை. இவ்வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’’ என கேட்டுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சதிஷ் உகே, ‘’நேரில் ஆஜராகக் கூடாது என, பட்னவிஸ் முடிவெடுத்துள்ளார். அவர் ஆஜராக தேவையில்லை’ என, அவரது வழக்கறிஞர், நவம்பர் 4ம் தேதி பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். ‘’ஆகவே, திட்டமிட்டு நீதிமன்றத்திற்கு வராத பட்நவிசுக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும்,’’ என, வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் எஸ்.டி.மேதா, வழக்கு விசாரணையை, ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: