கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையினால் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது

திருப்பத்தூர்: கடந்த சில நாட்களாக பெய்த மழையினல் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தாண்டாவது தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்க அணை திருப்பத்தூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை பாம்பாறு மற்றும் 2 ஆறுகளுக்குக் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.27.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இது சுற்றுலாவுக்கும் பொழுது போக்கிற்கும் புகளிடமாக இருந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கம் ஜவ்வாது மலை பகுதியில் இருந்து கொட்டாறு, மற்றும் பெரியாறு எனும் இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஆண்டியப்பனூர் அணையை வந்தடைகிறது. இந்த அணை 112.2 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் உயரம் 8 மீட்டர் ஆகும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் ஆண்டியப்பனூர் அணையில் தற்போது நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த அணை நிரம்பி தண்ணீர் மற்றும் உபரி நீர் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணை நிரம்பிய பின் வெளியேறிச் செல்லும் நீர், சின்னசமுத்திரம், வெள்ளேறி, மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று, அங்கிருந்து இரு கிளைகளாகப் பிரிந்து, ஒரு கிளையில் செலந்தம்பள்ளி, கோனேரிக்குப்பம், கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, ராச்சமங்கலம், பசலிக்குட்டை உள்ளிட்ட ஏரிகள் வழியாகச் சென்று பாம்பாற்றைச் சென்றடைகிறது. அதேபோல், மற்றொரு கிளையாக கணமந்தூர், புதுக்கோட்டை ஏரிகள் வழியாகச் சென்று திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி, பின்னர் பாம்பாற்றில் சென்றடைகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதேபோல், 2017-18ம் ஆண்டு பெய்த மழையில் திருப்பத்தூர் பெரிய ஏரி ராச்சமங்கலம் ஏரி நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆண்டியப்பனூர் அணை விவசாயிகள் நலன் கருதி கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகும். தற்போது இந்த அணையின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஏரி கால்வாய்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது.  இதனால் அணையில் இருந்து வெளியேறும் நீர் உரிய ஏரி பகுதிகளுக்கு சென்றடைவதில்லை.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே இந்த பருவ மழையின் போது அணை நிரம்பி வெளியேறும். மேலும் உபரிநீர் முழுமையாக விவசாய பகுதிகளுக்கும், ஏரி பாசன கால்வாய் பகுதிகளுக்கும் சென்றடையும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் 10 ஆண்டுகளாகவே தண்ணீர் வெளியேறாமல் பயன்படாத சூழல் உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஆண்டியப்பனூர் அணைப்பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தொகுதி எம்எல்ஏவும், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீல், ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாக தலமாக்க தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

அதை ஏற்று, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ‘ஆண்டியப்பனூர் அணைப் பகுதி சுற்றுலாத் தலமாக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இந்த அணையை சுற்றுலாத் தலமாக மாற்றி. படகு இல்லம், சிறுவர் பூங்கா, கேன்டீன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்ய அரசு ₹1.30 கோடி  நிதி ஒதுக்கியது. அந்த பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்கம் காட்சியளிக்கிறது. திருப்பத்தூரை மாவட்டமாக அறிவித்து மாவட்டத்தில் இந்த ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்க அணை பணிகள் இனியாவது புத்துயிர் பெறுமா? என்று மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: