உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மனைவி, உறவினர்களை நிறுத்தும் அதிமுக மாவட்ட செயலாளர்கள்

சென்னை : உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான நிர்வாகிகள் தங்களது மனைவி, மகள் மற்றும் உறவுப் பெண்களுக்கு சீட் வாங்க பகீரத முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதனால் மகளிர் அணி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியானது. இதனால் அரசியல் கட்சியினர் தொண்டர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் ஏராளமான நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் திடீரென்று மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லை. மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

இதனால் அந்தப் பதவிகளில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்கள் தங்களது விண்ணப்ப கட்டணத்தை திரும்ப பெறலாம் என்று அரசியல் கட்சிகள் அறிவித்தன. மேலும் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் எந்தெந்த வார்டுகளில் பெண்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது. இதனால், அதிமுகவில் பெண்கள் பகுதிகளில் உள்ள இடங்களைப் பிடிக்க கட்சியினருக்குள் கடுமையான போட்டி எழுந்துள்ளது. குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள், அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கள், பினாமிகள், அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் தங்களது மனைவிகளின் பெயர்களில் சீட் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். மனைவி போட்டியிடாவிட்டால், தங்களது மகள்கள் அல்லது உறவினர்கள் பெயர்களில் விண்ணப்பம் அதிகமாக கொடுத்துள்ளனர்.மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு முன்பு கட்சியின் தலைமையில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது அந்தப் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்வுகள் நடைபெறுகின்றன. இதனால் இந்த தலைவர் பதவிகளை குறி வைத்துள்ளவர்கள் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். ஆனால் கவுன்சிலர் பதவிக்கு கட்சித் தலைவர்களையோ, முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை பிடிக்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. கவுன்சிலர் பதவிகளைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்கள் நினைப்பவர்களுக்கே சீட் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாவட்டச் செயலாளரை மீறி கட்சியின் மற்ற முக்கிய நிர்வாகிகள், மக்கள் செல்வாக்கு பெற்ற பெண் தலைவர்கள், ஏன் முன்னாள் மேயர்கள் கூட சீட் பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பம் வழங்கும்போது கூட மாவட்டச் செயலாளர்கள் மிரட்டல் பாணியை கடைப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இது அதிமுக மகளிர் அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாவட்டச் செயலாளர் அல்லது நிர்வாகிகள் கட்சிக்காக உழைத்தாலும், அவரது மனைவி, மகள் மற்றும் உறவு பெண்கள் கட்சியின் ஒரு நிகழ்ச்சிக்கு கூட வந்தது இல்லை. கட்சியைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாத நிலையில் அவர்களுக்கு சீட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் ஆண்களுக்கு இணையான மகளிர் அணியினர் பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பெண்களுக்கான இடங்களில், தங்களை வேட்பாளர்களாக குறிப்பாக நிர்வாகிகளாக உள்ளவர்களை அறிவிக்காமல் உறவினர்களை அறிவித்தால், கட்சிக்குள் கடும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, மகளிர் அணியினர் எதிர்த்து நிற்பதற்கான வேலைகளை தற்போதே அவர்கள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அதிமுகவில் வேட்பாளர் தேர்வு பெரும் பிரச்னையை வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக சென்னை, நெல்லை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாநகராட்சிகளில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் புகார் செய்ய மகளிர் அணி நிர்வாகிகள், முன்னாள் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அதிமுகவில் மோதல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. இது அதிமுக நிர்வாக அமைப்பில் கடுமையான சேதத்தை உருவாக்கும் என்று கூறப்படுவதால் கட்சிக்குள் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: