மருந்து விற்பனையை அதிகரிக்க டாக்டர்களுக்கு பெண்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் : ஆய்வில் பகீர் தகவல்

புதுடெல்லி: மருந்து விற்பனையை அதிகரிக்க பரிசு பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலா என்ற நிலை மாறி, மருந்து நிறுவனங்கள் தற்போது பெண்களையும் சப்ளை செய்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருந்து விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. முன்பெல்லாம் ஒரு சில மருந்துகள்தான் சந்தையில் இருந்தன. இப்போது, புதுப்புது பெயரில் ஏராளமான மருந்துகள் வந்து விட்டன. ஒரே மருந்து நிறுவனங்களால் பல்வேறு பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, காய்ச்சல், வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் ‘பாரசிட்டமால்’ என்ற மருந்து, மருந்து நிறுவனங்களால் பல்வேறு பெயர்களில் விற்கப்படுகின்றன.  இதனால், தங்கள் மருந்தைத்தான் பரிந்துரைக்க வேண்டும் என, டாக்டர்களிடம் நிறுவனங்கள் நிர்பந்தம் செய்கின்றன. இதற்காக அவர்களுக்கு ஐபோன்,  நகைகள் போன்ற மதிப்பு மிக்க பரிசுப்பொருட்கள், கிப்ட் கூப்பன்கள், வெளிநாட்டு சுற்றுலா போன்றவற்றை தாராளமாக வாரி வழங்கி வந்தன. இவற்றை தடுக்க மத்திய அரசு கெடுபிடி சட்ட விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், பலன் இல்லை.

தற்போது மருந்து நிறுவனங்கள் ஒருபடி மேலே போய், பெண்களை சப்ளை செய்யவும் துணிந்து விட்டன என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சதி என்ற அமைப்பின் மூலம் 2 டாக்டர்கள் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 75க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 50க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள். விற்பனை மேலாளர்களிடம் நேர்காணல் நடத்தியுள்ளனர். இதில் அலோபதி மற்றும் ஆயுஷ் (சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் போன்றவை) டாக்டர்களும் அடங்குவர். அப்போது, பரிசுப்பொருட்கள் மட்டுமின்றி, பெண்கள் சப்ளை செய்ய நிறுவனங்கள் முன்வந்தது தெரிய வந்துள்ளது.

மருந்து விற்பனை பிரதிநிதிகளிடம் கேட்டபோது, ‘‘10 முதல் 20 சதவீத டாக்டர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை கடைப்பிடிக்கின்றனர். மற்ற டாக்டர்கள் பலர், மருந்துகளை பரிந்துரை செய்ய ‘தனி கவனிப்பு’ எதிர்பார்க்கின்றனர். சிலர் தாங்கள் வாங்கிய கார்களுக்கு இஎம்ஐ கட்ட சொல்கின்றனர். இதுபோல், ஹோமியோபதி, ஆயுர்வேத டாக்டர்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், கிராம பகுதிகளிலும் விற்பனையை அதிகரிக்க முடிகிறது. போட்டி அதிகம் இருப்பதால் டாக்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: