ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அருகே நள்ளிரவு அமாவாசை பூஜை நடத்திய சென்னை கும்பல் கைது: புதையல் எடுக்க நடந்ததா என விசாரணை

சென்னை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் துணை நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் தனபால். இவர் அமாவாசையையொட்டி கடந்த 26ம் தேதி தமிழகத்தில் இருந்து வந்த 7 பேர் உட்பட 9 பேர் கொண்ட  கும்பலுடன் சிவன் கோயில் அருகில் உள்ள காலபைரவர் கோயில் வளாகத்தில் நள்ளிரவு அமானுஷ்ய பூஜை நடத்தியுள்ளார். இதை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் வைரலாக பரவி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.  இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூஜை நடத்திய துணை நிர்வாக அதிகாரி தனபால், சென்னையை சேர்ந்த வெங்கடேஷ், பிரகாஷ், சிவகுமார், நந்தகுமார், எம்.வெங்கடேஷ், ராமன், பிரபு,  ரமேஷ்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து, புதையல் எடுப்பதற்காக பூஜை நடந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் துணை நிர்வாக அதிகாரி தனபால் ஏற்கனவே இதேபோல் நள்ளிரவு பூஜையில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட்  செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காளஹஸ்திக்கு வரும் பக்தர்கள் சிவன் கோயில் மற்றும் அதன் துணை  கோயில்களின்  நடை திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில்   மட்டுமே பூஜை நடத்த வேண்டும். நடை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் கோயில் வளாகத்திலோ அல்லது  கோயில்களிலோ அமானுஷ்ய பூஜை போன்றவற்றில் ஈடுபட்டால் சட்டப்படி குற்றமாகும். மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை   எடுக்கப்படும் என்றார்.

Related Stories: