மாநகராட்சி முதல் கிராம பஞ்சாயத்து வரை உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு: தமிழக அரசு அவசர சட்டம்

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி முதல் கிராம பஞ்சாயத்து வரை அனைத்து பதவிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முறையில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அவசர  சட்டம் ஒன்றை நேற்று அதிரடியாக பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்  அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. மேலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் செலவு கணக்கை தாக்கல் செய்வது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இதில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போதுஉள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் அனைத்தையும் முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் நகர்புறங்களில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், ஊரக பகுதிகளில் வாக்குச்சசீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி  கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டும்,  கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற  வாக்குச்சீட்டும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது போல் ஊரக பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கும் வகையில்  தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது ஊரக பகுதிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த சட்டத்தில்  வழி வகை செய்யப்படவில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நன்கு பரிசீலனை செய்து ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த அனுமதி அளித்து சட்டதிருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா?

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி நகர்ப்புறங்களில் உள்ள 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்  இருந்து பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது.  இந்நிலையில் ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக பகுதிகளில் மொத்தம் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதன்படி பார்த்தால் குறைந்தது 2  லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும். இதை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்று முதல் கட்ட பரிசோதனை முடிக்க குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் ஆகும். விரைவில் நடைபெறவுள்ள  உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தால் இது தொடர்பான பணிகளை முடிக்க அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.  இதன் மூலம் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் நிலை உருவாகும் என்று தெரிகிறது.

Related Stories: