மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை லட்ச தீபம்: டிசம்பர் 10ம் தேதி நடைபெறுகிறது

மதுரை: திருகார்த்திகை நாளான டிச.10ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்படும் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத உற்சவம் டிச.4ம் தேதி தொடங்கி டிச.13ம் வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. கார்த்திகையை முன்னிட்டு 10 நாட்கள் பஞ்ச மூர்த்திகள் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் புறப்பட்டு வலம் வருவர். திருக்கார்த்திகை நாளான டிச.10ம் தேதி, கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

அன்று மாலை 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி பூக்கடை தெருவிலும் எழுந்தருள உள்ளார். மேற்படி இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும்.

கார்த்திகை உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி அம்மன் கோயிலில் தங்க ரத உலா மற்றும் திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் நடைபெறாது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: