கோவை வனப்பகுதியில் சிக்கிய மாவோயிஸ்ட் தீபக் விமானம் மூலம் சட்டீஸ்கர் அழைத்து செல்லப்பட்டார்

கோவை: கோவை வனப்பகுதியில் சிக்கிய மாவோயிஸ்ட் தீபக், விமானம் மூலம் சட்டீஸ்கர் அழைத்து செல்லப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், கார்த்திக், சுரேஷ், அஜிதா ஆகிய 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் காயத்துடன் தப்பி ஓடினர். பலியானவர்களின் உடல்கள் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அஜிதா உடலை பெற்றோர் வாங்க மறுத்ததால் கேரள போலீசார் நேற்று முன்தினம் திருச்சூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

துப்பாக்கி சூட்டில் தப்பியோடிய 3 பேரில் ஒருவரான சட்டீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக்கை, கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 9ம் தேதி, தமிழக அதிரடிப்படை போலீசார் பிடித்தனர். அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அவர், காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரை நேற்று வரை (22ம் தேதி) நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். நேற்றுடன் தீபக்கின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர், நேற்று கோவை மத்திய சிறையில் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், வழக்கை விசாரித்து தீபக்கின் நீதிமன்ற காவலை டிசம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்நிைலயில் மாவோயிஸ்ட் தீபக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோவை மாவட்ட எஸ்பி. சுஜித்குமார் கலெக்டர் ராஜாமணிக்கு பரிந்துரை அனுப்பினார். இதன்படி மாவோயிஸ்ட் தீபக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகலை, சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் அளித்தனர். இதற்கிடையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்ட் தீபக் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

அவரை மருத்துவர்கள் 20 நிமிடங்களுக்கு மேல் பரிசோதனை செய்தனர். பின்னர், போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் தீபக்கை கோவை விமான நிலையம் கொண்டு சென்று சட்டீஸ்கர் மாநில போலீசரிடம் ஒப்படைத்தனர். அப்போது, திடீரென தீபக் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சட்டீஸ்கர் போலீசார் விமானம் மூலம் தீபக்கை ஐதராபாத் கொண்டு சென்றனர். அங்கிருந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Related Stories: