சிலை கடத்தல் வழக்கு விவகாரம்: பொன்.மாணிக்கவேலின் மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

புதுடெல்லி: தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடைக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைவிசாரித்த நீதிமன்றம், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது செல்லும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வினோத் கண்ணா, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,” சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக விசாரணை அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அதனால் அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து வரும் திங்கட்கிழமையே விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை பரிசீலனை செய்த நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, எப்படி உயர்நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இதில் ஒருவேளை வரும் 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை நடத்தினால் உடனே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் இங்குள்ள வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு பதிலாக முன்னதாக இந்த மாதம் 26ம் தேதியே பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்கிறோம் என நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: