மனைவியை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: மனைவியை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து எம்.பி, எம்.ஏல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ அசோகன். இவரது இரண்டாவது மனைவி ஹேமா, சென்னை பட்டினப்பாக்கத்தில் வசிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தனது கணவரின் உதவியாளருடன் ஹேமா, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கெட், பால் உள்ளிட்ட பொருட்கள் வழங்க சென்றுள்ளார்.

பின்னர், இரவு 9 மணிக்கு மேல் ஹேமா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அசோகன் ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். மேலும் அவதுறாக திட்டியுள்ளார். இதனையடுத்து வீட்டில் சண்டை அதிகரித்துள்ளது. இதனை ஹேமாவின் தாயார் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோகன், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஹேமாவை சுட்டுள்ளார். இதில் தப்பித்த ஹேமா தனது தாயாருடன் வீட்டை விட்டு தப்பித்து சென்று, பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 307(கொலை முயற்சி), 509(பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசுவது, ஆபாசமாக திட்டுவது, மற்றும் ஆயுத தடை சட்டம் விதிகளை மீறி துப்பாக்கி பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பு நடந்து வந்தது. வழக்கின் சாட்சி, குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் என அனைத்தும் கடந்தவாரம் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கை தள்ளிவைத்திருந்தார். அதன்படி நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது முன்னாள் எம்எல்ஏ அசோகன் நேரில் ஆஜராகியிருந்தார். நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. இதனைதொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி, உங்கள் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. உங்களை குற்றவாளி என்று அறிவிக்கிறேன் எனக்கூறினார். அதனைத்தொடர்ந்து சட்டப்பிரிவு 509ன் (மனைவியை அவதூறாக பேசியது) கீழ் 6 மாத சிறைதண்டனையும் ரூ.1000 அபராதம், ஆயுத தடை சட்டத்துக்கு 6 மாத சிறையும், கொலை முயற்சி வழக்கு 307க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று கூறி. இந்த தண்டனையை மூன்று ஆண்டு ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

3 ஆண்டு சிறை தண்டனை என்பதால், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறி, ஒருமாத காலத்திற்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி அசோகன் தரப்பில் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். இதனை பார்த்த நீதிபதி, வரும் டிசம்பர் 20ம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக கூறி உத்தரவிட்டார். இந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளில் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: