அந்தியூர் அருகே சிவன் கோயில் கட்ட 10 அடி குழியில் சாமியார் மவுன விரதம்

அந்தியூர்  : அந்தியூர் அருகே சிவன் கோயில் கட்டுவதற்காக சாமியார் ஒருவர் 10 அடி ஆழமுள்ள குழிக்குள் பாதாள லிங்கம் வைத்து 48 நாள் மவுன விரதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (60). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், விஸ்வநாதன் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர், டிரைவராக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு யோகா கற்றுக்கொண்டு பள்ளி, கல்லூரியில் யோகா பயிற்சி அளித்து வந்தார்.

இந்நிலையில், விஸ்வநாதன் அமர்நாத், காசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களுக்கு சென்று அங்கு தீட்சை பெற்றதாக கூறி வந்தார். மேலும், தனது கனவில் ஒரு மகான் தோன்றி, உனக்கு சொந்தமான காலியிடத்தில் 10 அடி ஆழத்தில் பாதாள லிங்கம் வைத்து 48 நாட்கள் கடும் மவுனவிரதம் இருந்து சிவன் கோயிலை கட்ட வேண்டும் என சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சாமியார் விஸ்வநாதன் அந்தியூர் அருகே நல்லிகவுண்டன் புதூரில் தனக்கு சொந்தமான 4.5 சென்ட் இடத்தில் பாதாள லிங்கம் அமைக்கும் பணியை துவக்கினார். இப்பணி நடந்த போது பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்து பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சென்றுள்ளனர்.

இதைதொடர்ந்து, அந்த இடத்தில் சிவன் கோயில் கட்டுவதற்காக 48 நாட்கள் கடும் மவுன விரதத்தை சாமியார் விஸ்வநாதன் துவக்கி உள்ளார். மேலும், 10 அடி ஆழத்தில் பாதாள லிங்கத்திற்கு தினமும் சிறப்பு பூஜை செய்து வருகிறார். உணவு உண்ணாமல் இளநீர், தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார். 48 நாட்கள் மவுன விரதம் முடிந்த உடன் இப்பகுதியில் 1008 லிங்கங்கள் அமைந்த மூன்றடுக்கு சிவன் கோயிலை கட்டி முடிப்பார் என அவருக்கு உதவி வரும் சிலர் கூறுகின்றனர். மவுன விரதம் இருக்கும் விஸ்வநாதனைக் காண சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: