தெலங்கானா எம்எல்ஏ குடியுரிமை திடீர் ரத்து: மத்திய உள்துறை அதிரடி

புதுடெல்லி: குடியுரிமை விண்ணப்பத்தில் உண்மைத் தகவல்களை மறைத்ததால், தெலங்கானா எம்எல்ஏ சென்னமணினியின் குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. தெலங்கானாவின் வெமுலவாடா தொகுதி எம்எல்ஏவான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த சென்னமணினி ரமேஷ், இந்தியாவில் பிறந்து, ஜெர்மனியில் குடியேறியவர். பின்னர் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். குடியுரிமையை பெற்றார். குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்வதற்கு முன், தொடர்ந்து 12 மாதங்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும்.

ஆனால், 96 நாட்கள் மட்டுமே தங்கியிருந்த நிலையில் சென்னமணினி விண்ணப்பம் செய்ததால் அவரது குடியுரிமையை ரத்து செய்ய மத்திய அரசு 2017ல் முடிவு செய்தது. ஆனால், உள்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், உண்மைத் தகவல்களை மறைத்து அரசை தவறாக வழிநடத்தியதால் சென்னமணினியின் குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்தது. தெலங்கானா உயர் நீதிமன்ற உத்தரவை உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளதால் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக சென்னமணினி கூறி உள்ளார்.

Related Stories: