ஏர்டெல், வோடபோன் நிறுவனத்தை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் சேவைக் கட்டணத்தை உயர்த்த முடிவு

டெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் சேவைக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலவசமாக இருந்த கால் சேவையை நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ஜியோ தெரிவித்திருந்தது. கடந்த காலாண்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஆகியவை சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் ஜியோ நிறுவனமும் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக டிராயுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து,  இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல் மய வளர்ச்சியையும் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் முதலீடுகளை நிலை நிறுத்துகிற வகையிலும் இந்த கட்டண உயர்வு அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாத வகையில் அந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>