சோனியா காந்தி குடும்ப பாதுகாப்பு மாநில அரசுகளுக்கு சிஆர்பிஎப் கடிதம்

புதுடெல்லி:  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கான புதிய நெறிமுறைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய ரிசர்வ் படை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரன் கவுர் ஆகியோருக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்த கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பையும் மத்திய அரசு விலக்கி கொண்டது. அவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை மூலமாக இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிஆர்பிஎப் கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் ஆகிய 5 பேருக்கும் முன்கூட்டிய பாதுகாப்பு தொடர்பு (எஏஸ்எல்) நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில உளவுத்துறை, காவல்துறை மற்றும் நிர்வாக இயந்திரங்களின் ஆதரவு தேவைப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.  இது மட்டுமின்றி, இவர்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக ஒரு பட்டாலியன் வழங்கும்படி சிஆர்பிஎப் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: