சபரிமலையில் தரிசனம் செய்ய சென்ற 2 பெண்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று தரிசனத்துக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த 2 இளம் பெண்களை போலீசார் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெண்கள் செல்ல தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள அரசு, ‘‘இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் அவர்களுக்கு தனியாக எந்த பாதுகாப்பும் அளிக்கப்படாது’’ என்று தெரிவித்தது.

இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கட்டமாக 23 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இளம் பெண்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் சபரிமலைக்கு வந்த 10 இளம் பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் நிலக்கல் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த குழுவினர் வந்த பஸ்சை சோதனையிட்டனர். இதில் பயணித்த தனலட்சுமி என்ற பெண் 30 வயது உடையவர் என்பதும், லட்சுமி பார்வதி என்பவர் 40 வயது உடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இரு பெண்களையும் போலீசார் நிலக்கலில் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் 3.32 கோடி வருமானம்

சபரிமலையில் கடந்த மண்டல மகரவிளக்கு சீசனில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டு 100 கோடிக்கு மேல் வருமானம் குறைந்தது. இது தேவசம்போர்டுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இம்முறை இளம் பெண்கள் திருப்பி அனுப்பப்படுவதால் குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. நடை திறந்த அன்று முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கார்த்திகை முதல் தேதியான 17ம் தேதி அன்று சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அந்த ஒரே நாளில் 3.32 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 2.04 கோடி வருமானம் தான் கிடைத்தது.

தமிழக துப்புரவு தொழிலாளி திடீர் மரணம்

சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவில் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கணேசன் காளிமுத்து(38) என்பவரும் ஒருவர். நேற்று முன்தினம் அவர் சன்னிதானத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை காளிமுத்து இறந்தார். அவரது உடல் ஐயப்பா சேவாசங்கம் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: