மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி குறித்து சோனியாவிடம் பேசவில்லை: சரத் பவார் அறிவிப்பால் தொடரும் குழப்பம்

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் தான் எதுவும் பேசவில்லை என்று சரத் பவார் அறிவித்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ, சிவசேனா கட்சிகளுக்கு முறையே 105, 56 என மொத்தம் 161 இடங்கள் கிடைத்தன. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பாஜ-சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கடந்த 12ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.இந்நிலையில், 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சி மேற்கொண்டது. மூன்று கட்சித் தலைவர்களும் பலமுறை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, புதிதாக அமையும் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் வரைவு திட்டமும் தயாரிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், ஆட்சியமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சரத் பவார் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசினார். அதன் பிறகு பேட்டியளித்த சரத் பவார், ‘‘மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சோனியாவிடம் பேசினேன். ஆனால், கூட்டணி ஆட்சி தொடர்பாக அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. மகாராஷ்டிராவின் அரசியல் நிலவரத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்’’ என்றார்.

பாஜ, சிவசேனா தங்கள் பாதையை தேர்வு செய்யட்டும்

மும்பையில் நேற்று காலை பேட்டியளித்த சரத் பவார், ‘‘மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த கூட்டணி ஆட்சியமைக்கத்தான் மக்களும் வாக்களித்தார்கள். அவர்களது (பாஜ, சிவசேனா) பாதையை அவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் எங்களது அரசியலை செய்கிறோம்’’ என்றார்.

பாஜவுக்கு 3, சிவசேனாவுக்கு 2 ஆண்டு முதல்வர் பதவி

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் முயற்சியை பாஜ.வும் கைவிடுவதாக இல்லை. மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீசி வரும் அதேவேளையில், சிவசேனாவை குளிர்வித்து மீண்டும் தன்பக்கம் இழுப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்த முறை மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே மூலம் பாஜ காய் நகர்த்தி வருகிறது. பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சியமைந்தால் பாஜ.வுக்கு 3 ஆண்டும், சிவசேனாவுக்கு 2 ஆண்டும் முதல்வர் பதவி என்ற புதிய பார்முலாவை ராம்தாஸ் அதாவலே தெரிவித்திருக்கிறார். இதற்கு சிவசேனா மசியும் என பாஜ நம்புகிறது.

Related Stories: