அயோத்தியில் மசூதி கட்ட அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலம் ஏற்கப்படுமா? : சன்னி வக்பு வாரியம் இன்று முடிவு

லக்னோ: அயோத்தியில் மசூதி கட்ட அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை பெறுவதா? வேண்டாமா? என்பதில் உள்ள சட்ட சிக்கல்களை ஆய்வு செய்ய இருப்பதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலத்தை அரசு தர வேண்டுமென உத்தரவிட்டது. இதற்கான நிலத்தை தேர்வு செய்யும் பணியில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அதே சமயம், அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை பெறுவதா? வேண்டாமா? என்பது குறித்து வரும் 26ம் தேதி இறுதி முடிவை தெரிவிப்பதாக சன்னி வக்பு வாரியம் கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த வாரியத்தின் தலைவர் ஜூபர் பரூக்கி நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களை வழிநடத்தும் அமைப்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் செயல்பட்டு வருகிறது. தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இல்லை என்றாலும், அதன் கருத்தை அறிவது முக்கியமானது. எனவே, தனிநபர் சட்ட வாரியத்துடனான ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. அதோடு, அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா அல்லது வேண்டாமா, நிராகரித்தால் அது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போலாகுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவை வரும் 26ம் தேதி அறிவிப்போம்,’’ என்றார். பாபர் மசூதி செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ஜிலானி கூறுகையில், ‘‘தனிநபர் சட்ட வாரியம் எடுக்கும் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், அவர்கள் எடுப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும் என கூற முடியாது,’’ என்றார்.

‘நிலத்தை ஏற்க முடியாது’

அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவராக இருந்த, ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் உபி மாநில தலைவர் மவுலானா அர்ஷாத் மதானி அளித்த பேட்டியில், ‘‘மசூதிக்கு ஈடாக உலகில் எதையும் தர முடியாது. அது பணமாகவும், நிலமாகவும் இருக்க முடியாது என எங்கள் அமைப்பின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து விஷயங்கள் குறித்தும் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், இறுதி முடிவு எடுப்போம்,’’ என்றார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு ஷியா முஸ்லிம் 51,000 நிதி

ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்மி அளித்த பேட்டியில், ‘‘அயோத்தி தீர்ப்பை மிகச்சிறப்பானது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இந்தியாவில் உள்ள ராம பக்தர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு பெருமை தரும் விஷயமாகும். இக்கோயில் கட்ட நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இதற்காக ‘வாசிம் ரிஸ்மி பிலிம்ஸ்’ சார்பில் ராம் ஜென்மபூமி நியாசுக்கு 51,000 நிதி அளிக்க வழங்கப்பட உள்ளது,’’ என்றார்.

Related Stories: