உயர்மின் கோபுரத்திற்காக நிலம் பறிக்கும் தமிழக அரசை கண்டித்து 18ம்தேதி விவசாயிகள் மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

சென்னை: உயர்மின் கோபுரம் அமைக்க வலுக்கட்டாயமாக நிலங்களை பறிக்கும் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் வரும் 18ம் தேதி சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வலியுறுத்தியும், போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய  சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் நவம்பர் 18ம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சாலைமறியல் போராட்டத்தை  நடத்த உள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்வதுடன், இந்த சாலை மறியல்  போராட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள கட்சி அணிகள் முழுமையாக பங்கேற்க வேண்டும்.மேலும், தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உடனடியாக தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டியக்கப் பிரதிநிதிகளை  நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது  நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>