வனப்பகுதியில் தொடர் மழையால் அட்டகாச யானையை பிடிக்கும் பணி பாதிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நவமலையில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்த ஒற்றை காட்டு ஆண்யானை, அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் பகுதியில் சுற்றித்திரிந்ததுடன், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து மரங்களை நாசப்படுத்தியும், குடிசை வீடுகளை இடித்தும் சூறையாடியது. யானை தாக்கி ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி பலியானார். திருமாத்தாள் என்பவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, காட்டு யானையை பிடிக்க அர்த்தனாரிபாளையத்தில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட வன அதிகாரிகள் முகாமிட்டனர்.

Advertising
Advertising

அட்டகாச யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமில் இருந்து கலீம் மற்றும் பாரி ஆகிய 2 கும்கிகள் நேற்று காலையில் கொண்டு வரப்பட்டு, வனப்பகுதியில் அட்டகாச யானை நின்ற இடத்தை நோக்கி வனத்துறையினர் புறப்பட்டனர். ஆனால், காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து வராமல் வனத்திற்குள்ளே நின்று கொண்டது. இதையடுத்து, அந்த யானை நிற்கும் இடத்திற்கு சென்று, விரும்பும் உணவை கொடுத்து, அதை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர்.

ஆனால், நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை அவ்வப்போது மழை பெய்ததால், வனஎல்லையில் நின்று கொண்ட அட்டகாச காட்டு யானை, வெளியில் வராததால், இரவில் யானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. யானையை பிடிக்க விடியவிடிய காத்திருந்த வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதைத்தொடர்ந்து இன்று காலையில், வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனவர்கள் என 30க்கும் மேற்பட்ட வனக்குழுவினர் வனத்திற்குள் சென்றனர். கலீம் மற்றும் பாரி கும்கி யானைகளை வனத்திற்குள் அழைத்து சென்று, மறைவான இடத்தில் நிற்கும் யானையை மயக்கஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணி துவங்கப்பட்டது. கும்கிகள் உதவியுடன் அட்டகாச யானையை பிடித்ததும், அதனை, வரகளியாறு முகாமில் உள்ள கூண்டில் அடைப்பதற்காக, 2 லாரிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: