சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளை வாங்க நள்ளிரவில் பேய் வேடமிட்டு மக்களிடம் பீதியை கிளப்பி அட்டூழியம் : 7 பேர் கைது

பெங்களூரு : பெங்களூரில் பிராங்க்-ஷோ என்ற பெயரில் பேய் வேடமிட்டு  பொதுமக்களிடம் பீதியை கிளப்பி வந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். யஷ்வந்த்பூர் என்ற இடத்தில் சில இளைஞர்கள் சாலையில் இங்கும் அங்குமாக பேய் போல வேடமிட்டு மக்களை அச்சுறுத்தி வந்தனர். வாகன ஓட்டிகளையும் மடக்கி அவர்கள் பீதியை கிளப்பினர். இதோடு நின்றுவிடாமல் சாலை ஓரங்களில் உறங்குவோரையும் எழுப்பி நடுங்கச் செய்தனர். மனிதனை பேய் கடித்து ரத்தம் குடிப்பதை போல அவர்கள் சித்தரித்தது முதியவரை கிடுகிடுக்கச் செய்தது. நள்ளிரவில் இவ்வாறு அட்டகாசம் செய்து வந்த 7 பேரையும் அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் சுற்றி வளைத்தனர்.

 இது போன்ற அகோர நடிப்புகள் மூலம் மக்களை உணர்வு ரீதியாக பீதியடையச் செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளை வாங்குவதே இவர்களது நோக்கம் ஆகும். 2017-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்டது கூகி பீடியா (kooky pedia) என்ற யூ டியூப் சேனல். அதில் முழுக்க முழுக்க பிராங் வீடியோக்களை மட்டுமே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.பிராங் வீடியோக்களுக்கு யூ டியூப் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தும், கூக்கி பீடியா யூ டியூப் சேனலை பெரிய அளவிற்கு யாரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அந்த சேனலுக்கும் தற்போது வரை வெறும் ஆயிரத்திற்கும் குறைவான சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே கிடைத்துள்ளனர்.இதனால் சேனலை பிரபலபடுத்த நினைத்த அந்த இளைஞர்கள் என்ன செய்யலாம் என யோசித்தனர்.அப்போது, ஆஸ்திரேலியாவில் பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் யூடியூப் காட்சி பிரபலமாக இருந்தது தெரிய வந்தது. அதற்கு மொழியைக் கடந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தங்களது சேனலை பிரபலப்படுத்த பேய் வேடமிட்டு பிராங் வீடியோக்களை எடுப்பது என முடிவு செய்து களத்தில் இறங்கிய இளைஞர்கள் தற்போது கைதாகி உள்ளனர்.

Related Stories: