நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குண்டு குழி சாலைகள் சீரமைக்கப்படுமா?

* பாதாளசாக்கடை பணி முடிந்தும் அலட்சியம்

* பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை பணிகள் தொடங்கி சுமார் 7 ஆண்டுகளை கடந்துள்ளது. தற்போது பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணியை குடிநீர் வடிகால்வாரியம் செய்து வருகிறது. இதற்கிடையே பாதாளசாக்கடை பணி முடிந்த பல பகுதிகளில் இன்னும் சாலைகள் போடாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி பொது மக்கள், வாகன ஒட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஆராட்டுரோடு, சோழராஜகோயில்தெரு, வைத்தியநாதபுரம் ஆற்றங்கரைரோடு, பால்டேனியல்தெரு, மீனாட்சிபுரம் பகுதி, வடிவீஸ்வரம் அண்ணாநகர், தோப்புவணிகதெரு, ராமன்புதூர், தேவசாகயம்தெரு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட தெருக்கள் மற்றும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சிறிது மழை பெய்தால் கூட இந்த சாலைகளில் பைக்குகளில் செல்வது மிகவும் சிரமமான உள்ளது.

இந்த பகுதிகளில் பாதாளசாக்கடை பணி முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆகவே சாலைகளை செப்பனிட மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை பணி நடந்து வருகிறது. பாதாளசாக்கடை பணி முடிந்த பகுதிகளில் கூட சாலைகள் போடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைகாலங்களில் சகதிகாடாக உள்ளது. வெயில் காலங்களில் புழுதி வீசுகிறது. பாதாளசாக்கடை பணி முடிந்த பகுதிகளில் சாலைகள் போட கோரிக்கை விடுத்தும், சாலையை சீரமைக்காமல் மாநகராட்சி காலம் கடத்தி வருகிறது. இதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுவரி, குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட வரி வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இதேபோல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளில் தீவிரம் காட்டி வரும் மாநகராட்சி அதிகாரிகள், வளர்ச்சி பணிகளும் தீவிரகாட்ட வேண்டும். ஆனால் வளர்ச்சி பணியில் அவர்கள் மெத்தனபோக்கை கடைப்பிடித்து வருகின்றனர். வரிவகைகளை தீவிரமாக வசூல் செய்யும் அதிகாரிகள், சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.என்றார். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நாகர்கோவில் மாநகராட்சியில் போதி நிதி இருப்பு குறைவாக உள்ளது. தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்கு பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு தொகையை மாநகாட்சி கட்டியுள்ளது. இதனால் சாலை பணிகள் உள்ளிட்ட பணிகள் செய்வதில் போதிய நிதி இல்லாதகாரணத்தால், முக்கியமான பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: