கேரளாவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் கோவை வனத்தில் மாவோயிஸ்ட் கைது: தப்பி ஓடிய 2 பெண்களை பிடிக்க வேட்டை

கோவை: துப்பாக்கி சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட் தீபக்கை அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.கேரள மாநிலம் பாலக்காடு மஞ்சகண்டி வனத்தில் கடந்த 28ம் தேதி மாவோயிஸ்ட், கேரள அரசின் தண்டர்போல்ட் போலீசார் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 மாவோயிஸ்ட்கள் இறந்தனர். மாவோயிஸ்ட் குழுவின் ஆயுத  பயிற்சியாளரான சட்டீஸ்கரை சேர்ந்த தீபக் (32) உள்பட 3 பேர் தப்பினர். இவர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஏ.கே.-47 துப்பாக்கியுடன் தீபக், வனத்தில் பயிற்சி தரும் போட்டோ சமீபத்தில் வெளியானது.  இவரை கோவை நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று மதியம், ஆனைகட்டி மூலக்கங்கன் வனத்தில் மாவோயிஸ்ட்கள் சிலர் துப்பாக்கியுடன் சென்றதை அந்த பகுதி மலை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதிரடிப்படை எஸ்.பி. மூர்த்தி தலைமையில் போலீசார் மூலக்கங்கன் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களில் தீபக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மற்ற 2  பேரும் தப்பிவிட்டனர். அவர்கள் 2 பேரும் மதி, சோனா என்று தெரியவந்துள்ளது.

கைதான தீபக்கை வீரபாண்டி பிரிவில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு முகாம் அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.  மாவோயிஸ்ட் கும்பலின் நடமாட்டம், கோவை மற்றும் கேரள மாநிலத்தில் அவர்களின் செயல் திட்டம்,  மாவோயிஸ்ட் குழுவில் உள்ளவர்களின் விவரம் குறித்து விசாரித்தனர். தீபக் அளித்த தகவல்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.  தீபக்கின் கை, கால்களில் காயம் இருந்ததாக தெரிகிறது. வேகமாக நடக்க முடியாத நிலையில், போலீஸ் வருவது  தெரிந்தும் தப்ப முடியாமல் அவர் சிக்கி ெகாண்டதாக கூறப்படுகிறது. மூலகங்கன் வனப்பகுதியில் நீரோடை உள்ளது. இந்த நீரோடையின் மறு பகுதி கேரள எல்லைக்குள் உள்ளது. கேரள அரசின் தண்டர்போல்ட் போலீசாரிடம் சிக்கக்கூடாது  என்ற நோக்கத்தில் தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள் கோவை எல்லைக்குள் வந்ததாக தெரிகிறது. தீபக்கிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தீபக்கை தங்கள் வசம்  ஒப்படைக்கவேண்டும் என ேகரளாவின் தண்டர்போல்ட் போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஒப்படைக்கப்படவில்லை. தீபக் மீது கோவை மற்றும் தமிழக எல்லைக்குள் வழக்கு இருக்கிறதா?, இல்லையா? என தெரியவில்லை. இதனால், அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது என அதிரடிப்படையினர் தெரிவித்தனர். தீபக்குக்கு உள்ளூர் அரசு  ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பிச்சென்ற 2 பெண் மாவோயிஸ்ட்களை பிடிக்க அதிரடிப்படை குழுவினர் பாலமலை, ஆனைகட்டி வனத்திற்குள்  சென்றுள்ளனர்.

மஞ்சகண்டியில் இறந்தது மதி அல்ல; ரமா

கடந்த 28ம் தேதி மஞ்சகண்டி துப்பாக்கி சூட்டில் மதி இறந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இறந்தது மதி அல்ல ரமா என தற்போது தெரியவந்துள்ளது. மதிக்கு 6 மாத குழந்தை இருப்பதாக தெரிகிறது. இந்த குழந்தை  அட்டபாடியில் உள்ள ஒரு குடும்பத்தினரிடம் மதி ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது. குழந்தையை பார்க்க வரும் தகவலை வைத்து தமிழக அதிரடிப்படையினர் காத்திருந்தனர். ஆனால், அதிரடிப்படையினர் மறைந்திருப்பதை அறிந்த மதி  ஆனைகட்டி மூலக்கங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தீபக் பிடிபட்டதை அறிந்த மதி தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.

Related Stories: