சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு கமாண்டோ பாதுகாப்பு திடீர் ரத்து: பிரதமர் மோடிக்கு மட்டும் 3000 வீரர்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு கமாண்டோ (எஸ்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு திடீரென ேநற்று ரத்து செய்தது. அவர்களுக்கு இனிமேல் இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே அளிக்கப்பட உள்ளது. சிறப்பு பாதுகாப்பு குழுவை சேர்ந்த 3,000 வீரர்களும் இனிமேல் பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.   கடந்த 1984ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, பிரதமர்களின் பாதுகாப்புக்காக தனிப் பிரிவு வேண்டுமென சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) உருவாக்கப்பட்டது. இக்குழு பிரதமர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என கடந்த 1988ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.

 இதற்கிடையே, கடந்த 1991ல் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பிரதமர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எஸ்பிஜி.க்கு வழங்கப்பட்டது.

அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுவோருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்து, பாதுகாப்பு தொடர்வது குறித்து முடிவெடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை, உள்துறை அமைச்சக செயலர், அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. எஸ்பிஜிக்கு பதிலாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. மன்மோகன் சிங் போலவே, சோனியா குடும்பத்தினருக்கும் நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

இனி இவர்கள் 3 பேருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டு முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து நேற்று மாலை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சோனியா குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரதமர் மோடி மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பில் இருக்கிறார். அப்படைப் பிரிவில் உள்ள 3,000 வீரர்களும் இனிமேல் பிரதமர் மோடியின் பாதுகாப்பை மட்டுமே கவனிக்க உள்ளனர்.

முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்ற சட்டம், கடந்த 2002ல் திருத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென சட்டம் மாற்றப்பட்டது. அதன்படியே, தற்போது 3 மாதத்திற்கு ஒருமுறை உளவு அமைப்புகளிடம் இருந்து தகவல்களைப் பெற்று, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஜி குற்றச்சாட்டு

சோனியா குடும்பத்தினர் தங்களுக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், பலமுறை எஸ்பிஜி விதிமுறைகளை அவர்கள் மீறியதால் பாதுகாப்பு வீரர்களால் சுமூகமாக செயல்பட முடியவில்லை என்றும் எஸ்பிஜி குற்றம்சாட்டி உள்ளது. அதன் அதிகாரிகள் கூறுகையில், ‘‘2019 வரை ராகுல் காந்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் 247 முறை, 2015 வரை டெல்லிக்குள் அவர் 1,892 முறையும் குண்டு துளைக்காத வாகனத்தை புறக்கணித்துள்ளார். 1991ல் இருந்து தனது 156 வெளிநாட்டு பயணத்தில் 143ல் எஸ்பிஜி உடன் வருவதை தவிர்த்துள்ளார். அதற்காக கடைசி நிமிடத்தில் பயண விவரத்தை அளித்துள்ளார். சோனியா 24 வெளிநாட்டு பயணத்திலும், பிரியங்கா 99 வெளிநாட்டு பயணத்தில் 78 முறையும் எஸ்பிஜியை தவிர்த்துள்ளனர். கார் கூரை மீது பயணிப்பது உள்ளிட்ட பல விதிமீறல்களில் ராகுல் ஈடுபட்டுள்ளார். எஸ்பிஜி அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பிரியங்கா மிரட்டி உள்ளார்,’’ என்றனர்.

சிறப்பம்சங்கள்

* எஸ்பிஜி படையில் 3,000 வீரர்கள் உள்ளனர். இப்பிரிவுக்காக ஆண்டுக்கு 400 கோடியை அரசு செலவிடுகிறது.

* இப்படைப்பிரிவு அதிநவீன இயந்திர துப்பாக்கி, இருட்டிலும் பார்க்கக் கூடிய கண்ணாடி, குண்டு துளைக்காத கவசங்களை கொண்டிருக்கும்.  இவர்கள், ஆயுதம் பொருந்திய அல்லது குண்டு துளைக்காத பிஎம்டபிள்யு உள்ளிட்ட நவீன சொகுசு வாகனங்களில் வருவார்கள்.

*  பாதுகாப்பு அளிக்கப்படும் நபர் வெளிநாடு உட்பட எங்கு சென்றாலும் இந்த படைக் குழுவினரையும், இதர உபகரணங்களையும் விமானப்படை விமானத்தில் கொண்டு செல்வர்.

*  பாதுகாப்பு அளிக்கப்படும் நபர் உள்நாட்டில் செல்லும் இடங்கள் 24 மணி நேரத்திற்கு முன்பாக எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, மோப்ப நாய், வெடிகுண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

* எஸ்பிஜிக்கு எந்த விதத்திலும் இசட் பிளஸ் பாதுகாப்பு குறைந்ததல்ல.

* தேசிய பாதுகாப்பு குழுவானது (என்எஸ்ஜி) இசட் பிளஸ் பாதுகாப்புக்கான வீரர்களை அனுப்பி வைக்கும்.

* இதில் 10 என்எஸ்ஜி கமாண்டோக்கள் உட்பட 55 வீரர்கள் விவிஐபி.யை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பர்.

* இப்படைப் பிரிவினரும் நவீன இயந்திர துப்பாக்கிவைத்திருப்பர். ஆயுதமின்றி தாக்குதல் நடத்துவதிலும், நவீன ஆயுத கலைகளிலும் கை தேர்ந்தவர்களாக இருப்பர்.

* முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, வி.பி.சிங், மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மட்டுமே, 2018ம் ஆண்டில் இறக்கும் வரை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது.

‘பழி வாங்கலின் அதலபாதாளம்’

சோனியா குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில முதல்வர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவரான அகமது படேல் தனது டிவிட்டர் பதிவில், ‘தீவிரவாதம், வன்முறைக்கு 2 முன்னாள் பிரதமர்களை இழந்த குடும்பத்தினரின் பாதுகாப்பை ரத்து செய்ததன் மூலம் தனிப்பட்ட பழிவாங்கலில் அதலபாதாளத்தை பாஜ தொட்டு விட்டது,’ என கூறியுள்ளார்.

Related Stories: