இந்திய ஐடி ஊழியர்களுக்கு எச்-1பி விசா மறுப்பு அதிகரிப்பு

வாஷிங்டன்:  அமெரிக்க கொள்கைக்கான தேசிய பவுண்டேசன் என்ற அமைப்பு சார்பில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) ஆகியவற்றின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அமெரிக்காவில் உள்ள பிரபலமான இந்திய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு என்பது கடந்த 2015ல் 8 சதவீதமாக இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், இந்திய ஐடி நிறுவனங்களை குறிவைத்து குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்படுவது, மேற்கண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, இந்தியாவில்இருந்து வரும் ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதை குறைத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் நிராகரிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் நிராகரிப்பு இந்திய நிறுவனங்களான டெக் மகேந்திரா நிறுவனத்தில் 4 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் 6 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தில் 7 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் 2 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விசா கட்டுப்பாடுகளால் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினர், அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தமும் ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவது எதிர்காலத்தில் குறையலாம் என்று கூறப்படுகிறது. இதனால், அமெரிக்காவிற்குதான் இழப்பு ஏற்படும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: