பாஜ கட்சியுடன் தமாகாவை இணைக்க திட்டம்? பிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு: அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசன் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக ஜி.கே.வாசன் அக்கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார். அவரது கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில் தமாகா வேட்பாளர் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, ஜி.கே.வாசனை ஒவ்வொரு கூட்டத்திலும் கவுரவப்படுத்தி வந்தார்.

இதுபோன்ற சம்பவங்களால் ஜி.கே.வாசன் பாஜவில் தனது கட்சியை இணைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் 2 மாதத்திற்கு முன் திடீரென, தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழக பாஜ தலைவர் பதவி காலியாக உள்ளது. தமாகாவை பாஜவுடன் இணைத்தால், தமிழக பாஜ தலைவராக ஜி.கே.வாசனை நியமிப்பது குறித்து பாஜ முன்னணி தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும், காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஒரு கட்சியை பாஜவுடன் இணைக்க ஜி.கே.வாசன் தயக்கம் காட்டி வந்தார்.  இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் சீன அதிபர் ஜின்பிங் சென்னை வந்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியும் சென்னை வந்தார். இந்த இரு தலைவர்களையும் வரவேற்க ஜி.கே.வாசன் விமான நிலையம் சென்றார்.

அப்போது தன்னை வரவேற்க வந்த ஜி.கே.வாசனின் கைகளை பிடித்து கொண்ட பிரதமர் மோடி, டெல்லி வந்து தன்னை சந்திக்குமாறு வாசனிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிரதமரின் அழைப்பை ஏற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். நேற்று காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஜி.கே.வாசனை பாஜகவில் இணையும்படி பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்படி பாஜகவில் இணைந்தால், தமிழக பாஜ தலைவராகவோ அல்லது மத்திய அமைச்சர் பதவியோ தரப்படும் என்றும் உறுதி அளித்ததாக டெல்லி பாஜ வட்டாரத்தில் பேசப்படுகிறது.  பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிரதமரை நான் சந்தித்த போது நானும் அவரும் தான் இருந்தோம். அங்கு என்ன பேசினோம் என்பது எனக்கும் அவருக்கும் தான் தெரியும். அதை உங்களிடம் சொல்லிவிட்டேன். இதை தாண்டி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்’’ என்றார்.

Related Stories: