தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தல் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்

ஸ்நகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பலர் மாநிலத்துக்கு வெளியே சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 31ம் தேதி முதல் இந்த மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இக்கட்சி வெளியிட்டுaள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 5ம் தேதியுடன் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகியுள்ளது. 90 நாட்களுக்கு மேல் ஆன பின்னரும் தகவல் தொடர்பு மற்றும் சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பகுதியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள இயலாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் மாநிலத்துக்கு வெளியே உள்ள சிறையில் இருக்கின்றனர். பல குடும்பங்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளன. இயல்புநிலை திரும்ப அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிறை வைக்கப்பட்டுள்ள 3 முன்னாள் முதல்வர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தொடர்ந்து  காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட் முடக்கத்தால் முறையாக சுகாதார பராமரிப்பு இன்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களும், வர்த்தக சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: