மதுரை ஆவின் இடைக்கால தலைவராக அதிமுக மாஜி எம்எல்ஏ நியமனம் சட்டவிரோதம்: தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க அதிரடி உத்தரவு

மதுரை: மதுரை ஆவின் இடைக்காலத் தலைவர் நியமனம் சட்டவிரோதம் என்பதால், தேர்தல் நடத்தி முறையாக தலைவரை தேர்வு செய்ய  ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவினுக்கு உட்பட்ட உசிலம்பட்டி, இ.புதுப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். மதுரை ஆவின் தலைவராக துணை முதல்வரின் தம்பி ஓ.ராஜா இருந்தார். கடந்த ஆக. 22ல் மதுரை ஆவினில் இருந்து தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதனால், ஓ.ராஜா தேனி மாவட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மதுரை ஆவின் இடைக்காலத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவர், எந்த தொடக்க பால் கூட்டுறவு சங்கத்திலும் உறுப்பினராக இல்லை.  எனவே, இவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை செப். 4ல் விசாரித்த ஐகோர்ட் கிளை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தமிழரசன் மதுரை ஆவின் இடைக்காலத் தலைவராக செயல்படக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.  இதேபோல், மதுரை ஆவின் இயக்குநர்கள் பெரியகருப்பன் உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘முன்னாள் அதிமுக எம்எல்ஏ  தமிழரசன், மதுரை ஆவின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யயப்பட்டதை ரத்து செய்யவும், மதுரை ஆவின் தலைவரை முறைப்படி தேர்தல் நடத்தி தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒருங்கிணைந்த சங்கங்கள் எப்போது இரண்டாக பிரிக்கப்பட்டதோ, அப்போதே அதற்குரிய நிர்வாகியை ஜனநாயக முறைப்படி தான் தேர்வு செய்ய வேண்டும். அப்படி பார்க்கும்போது தமிழரசன் நியமனம் சட்டவிரோதம். இதற்கான தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். ஆவின் நிர்வாகத்தின் அன்றாட பணிகள் பாதிக்காத வகையில் அதற்குரிய பணிகளை பொதுமேலாளர் தரப்பில் மேற்கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: