வேலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் பொருளாதாரத்தில் உயர்ந்தவரே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் : அமைச்சர் வீரமணி பேச்சால் பரபரப்பு

வேலூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு கட்சியினரிடம் பூத்வாரியாக வாக்காளர் பட்டியல் வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது நமது கட்சிக்கு எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். எவ்வித சண்டை சச்சரவுகளுக்கும் இடமின்றி கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும். பொருளாதாரத்தில் வேட்பாளர்கள் உயர்ந்தவராக இருக்கவேண்டும். குறிப்பாக அவர் அந்த பகுதியில் நன்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் நிறுத்தப்படும் எந்த வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவரை எதிர்த்து நமது கட்சிக்குள்ளேயே தனியாக களம் இறங்கக்கூடாது.  எம்பி தேர்தல் தோல்விக்கு பாஜகவின் மீது இருந்த அதிருப்தியே காரணம். இதனால் நமது வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1500 பூத்துகளில் தலா ஒரு பூத்துக்கு 2 அல்லது 3 வாக்குகள் கூடுதலாக கிடைத்திருந்தாலே நாம் நிச்சயம் ெஜயித்திருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

பெண் நிர்வாகி ஆவேசம்: அமைச்சர் டென்ஷன்

அமைச்சர் வீரமணி பேசும்போது, ‘வட்ட, பகுதி செயலாளர்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும்’ என குறிப்பிட்டார். அதைக்கேட்டதும் கூட்டத்தில் இருந்த முன்னாள் மகளிரணி செயலாளர் சாரதா ஆவேசத்துடன் எழுந்து, ‘நீங்கள் சொல்வது போல் யாரும் வருவதும் இல்லை. போவதும் இல்லை. அமைச்சரான உங்களை பார்க்கவே பிஏக்கள் விடுவதில்லை. உங்களைச் சுற்றியே நின்றுகொண்டிருக்கின்றனர். இதில் வட்ட, பகுதி செயலாளர்கள் எப்படி எங்களை பார்க்க வருவார்கள் என்று கூச்சலிட்டார். இதைக்கேட்டு டென்ஷனான அமைச்சர், ‘அந்த அம்மாவை வெளியேற்றுங்கள்’ என கோபமாகக் கூறினார். இதையடுத்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அமரவைத்தனர்.

Related Stories: