அரக்கோணம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பு: பேரூராட்சி நிர்வாகமே குப்பை கொட்டுவதாக மக்கள் வேதனை

வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலம் பேரூராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டி கொசஸ்தலை ஆற்றை மாசுபடுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். குப்பைகளை ஆற்றில் கொட்டுவதால் குடிநீருக்கு அபாயமும் ஏற்படும் எனவும், கால்நடைகள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேரூராட்சியில் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து நாள்தோறும் பேரூராட்சியின் சார்பாக 2 டன் கழிவு பொருட்களான குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அகற்ற வேண்டும் என்பது விதிமுறைகளாகும்.

ஆனால் பேரூராட்சி நிர்வாகமானது சுமார் 33 லட்சம் ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மையை பயன்படுத்தாமல் அருகே அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றில் நாள்தோறும் சேமிக்கக்கூடிய 2 டன் கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் நாளடைவில் ஆற்றின் அகலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆறு இருக்கும் இடம் தெரியாமல் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. கொசஸ்தலை ஆறானது காவிரிபாக்கத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை செல்லக்கூடியது. மேலும் சுமார் 5லிருந்து 6 அடி அளவிற்கான குப்பைகள் தேங்கி இருப்பதால் வருங்காலங்களில் ஆற்றில் ஏதேனும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீரானது ஊருக்குள் புகும் அபாய நிலையும் எட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக அரசானது தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாக்கும் வண்ணமாக ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலை பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள பேரூராட்சி நிர்வாகமானது ஆற்றை மாசுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றினை சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: