உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தனக்கு அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அதன்படி, தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. இந்நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ஷரத் அரவிந்த் பாப்டே (எஸ்.ஏ.பாப்டே) பெயரை உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து ரஞ்சன் கோகாய் சமீபத்தில் கடிதம் எழுதினார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று, எஸ்.ஏ.பாப்டே தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 47வது புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18ம் தேதி பதவியேற்க உள்ளார். அவர், 2021 ஏப்ரல் 23 வரை இப்பதவியை வகிப்பார். புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். இவரது குடும்பம் பாரம்பரிய வக்கீல் குடும்பமாகும். இவரது தந்தை அரவிந்த் பாப்டே 1980 முதல் 1985 வரை மகாராஷ்டிர மாநில அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். இவரது மூத்த சகோதரரான வினோத் அரவிந்த் பாப்டே உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார். மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே பின்னர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். ஆதார் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தவர் எஸ்.ஏ.பாப்டே. தற்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஓய்வுக்கு முன்பு வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கின் தீர்ப்பை வெளியிட உள்ளார்.

Related Stories: