புதிய யூனியன் பிரதேசங்கள் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆளுநர்கள் நியமனம்: மிசோரமுக்கு ஸ்ரீதரன் பிள்ளை

புதுடெல்லி: காஷ்மீரை இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், அம்மாநில கவர்னர் மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேச புதிய கவர்னராக கிரிஸ் சந்திரா முர்முவும், லடாக் கவர்னராக  ஆர்.கே.மாதூரும் நியமிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசமாக  பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இவை வரும் 31ம் தேதி முதல் முறைப்படி இரு யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக், கோவா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிதாக பிரிக்கப்படும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  முதல் துணை நிலை கவர்னராக குஜராத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கிரிஸ் சந்திரா  முர்முவும், லடாக் துணை நிலை ஆளுநராக முன்னாள் தலைமை தகவல் ஆணையரும், பாதுகாப்பு செயலாளருமான ஆர்.கே.மாதூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதே போல், மிசோரம் மாநில ஆளுநராக கேரள மாநில பாஜ தலைவர்  பி.எஸ்.தரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, காஷ்மீரை இரு யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்தி உள்ளது. இதற்காக, மாவட்ட நுகர்வோர் அமைப்புகள்  கலைக்கப்படுவதாக நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் தங்கள் பணியை நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோடி மகிழ்ச்சி

காஷ்மீரில் வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் 98.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, இம்மாநிலத்தில் இதுவரை பதிவாகாத ஓட்டு சதவீதமாகும். காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி போன்றவை தேர்தலை  புறக்கணித்த நிலையிலும், அதிகளவு வாக்குப்பதிவு நடைபெற்றதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.  ‘மக்கள் ஜனநாயக அடிப்படையிலான அதிகாரத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதை நாம் அறிய முடிகிறது,’ என அவர் கூறியுள்ளார்.

Related Stories: