போலி செய்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதள கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி: சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க ஆதார் பான் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அவற்றுடன் இணைக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு நேற்று தாக்கல்  செய்யப்பட்டது.

 தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் போலியாகவும், பணத்திற்காகவும் ஒரு தலைபட்சமாக செய்திகள் வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜ.வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யாய், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.அதில், ‘பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், குறிப்பாக நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் கால கட்டத்தில், போலியான செய்திகள் வெளியிடப்படுகின்றன.  இதனைத் தடுக்க, சமூக வலைதள  கணக்குகளுடன் ஆதார் எண், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்கவும், போலி கணக்குகளை கண்டறிந்து அவற்றை நீக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும், ’என்று  கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தண்டனை சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தகவல் தொழில்நுட்பம் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச  நீதிமன்றம் கடந்த 14ம் தேதி மறுத்து விட்டதால், உயர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் நடந்து வரும் சமூக வலைதளங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அடுத்த ஜனவரிக்குள் அறிக்கை தாக்கல்  செய்யவும் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: