பாலாற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு ஆந்திர அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவிற்கு ஆந்திர அரசு அடுத்த 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளது.

 பாலாறு அணை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல்  அவகாசம் வழங்க வேண்டும் என ஆந்திர அரசு கோரிக்கை வைத்ததால் 4 வாரம் அவகாசம் வழங்கி கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிடப்பட்டது.     
Advertising
Advertising

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, தனது வாதத்தில்,”பாலாற்றின்  குறுக்கே கங்குந்தி என்ற இடத்தில் இருக்கும் தடுப்பணையை 22 அடியில் இருந்து 40 அடியாக ஆந்திர அரசு தற்போது உயர்த்தி கட்டி வருகிறது. இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.  இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவிற்கு ஆந்திர அரசு அடுத்த 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்புகிறது. ஆந்திராவின் விளக்கத்திற்கு அடுத்த 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: