ஆம்பூர் வனச்சரகத்தில் அவலம்: பூட்டியே கிடக்கும் வனத்துறை குடியிருப்புகள்...பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆம்பூர்: ஆம்பூர் வனச்சரகத்தில் தமிழக அரசு வனத்துறை சார்பாக கட்டப்பட்ட பல்வேறு குடியிருப்புகள் ஊழியர்கள் பயன்படுத்தாத நிலையில் பாழடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆம்பூர் வனச்சரகத்தில் ஒவ்வொரு காப்புக்காடுகள் பகுதியிலும் வனத்துறையை சேர்ந்த வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்கள் தங்குவதற்கு வனத்துறை சார்பாக அலுவலர் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.அதன்படி லட்சம் ரூபாய் செலவில் ஆம்பூர் அடுத்த அரங்கல்துர்கம், சாரங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் ஊழியர் குடியிருப்பு கடந்த சில  மாதங்களுக்கு முன்பு இடிந்து சேதம் அடைந்தது. ஆனால் இதுவரை புதிய கட்டிடமும் கட்டி கொடுக்கப்படவில்லை.

வனப்பகுதியில் சமூக விரோதிகள் நுழைந்து  சமூக விரோத செயல்களில் ஈடுபவதை தடுக்கவும், வன விலங்குகளால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்பட்டாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அவர்களை  அணுக வசதியாகவே இந்த குடியிருப்புகள் கடந்த பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.ஆனால், வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் வனச்சரக அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து போவதற்கு வசதியாக இல்லை என்ற காரணத்தினாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளின் நலன் கருதியும் நகரப்பகுதிகளில்  வாடகை வீடு எடுத்து தங்கி அங்கேயே இருந்து வருகின்றனர்.

இதனால் வன விலங்குகளால் பொதுமக்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும் போது இந்தக் குடியிருப்புகளில் கிராமமக்கள் வந்து பார்த்தால் வனத்துறை ஊழியர்கள் இருப்பதில்லை. சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்களுக்கு அலைபேசியில்  தொடர்பு கொண்டால் பெரும்பாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் மற்றும் சுவிட்ச் ஆப் என்றே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளும் பூட்டியே  கிடக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வனத்துறை குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் வந்து குடியிருக்க வேண்டும். சிறுத்தை போன்ற விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும்போது அதை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். கால்நடைகளை சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கவும் வனத்துறை ஊழியர்கள் குடியிருப்புகளில் வந்து குடியேற வேண்டும். அதேபோல் மலைப்பாம்புகள் உள்ளிட்டவை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வரும்போது பிடிக்க வனத்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் குடியிருந்தால் மட்டுமே தங்களை காத்துக்கொள்ள முடியும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: