பொள்ளாச்சி பாலியல் விவகாரம் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை நீடித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணனும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. 5 பேரும் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த 5 பேருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது.

எனவே அவர்கள் நேற்று சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி: இதற்கிடையில், திருநாவுக்கரசு ஜாமீன் கேட்டு, 10 நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் விசாரணை இன்னும் முடிவடையாத காரணத்தால் ஜாமீன் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை நீதிபதி ரவி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: