தேர்தல் அறிவிப்பு வரும் முன் 100 கோடியை செலவழிக்க ஆம் ஆத்மி அரசு திட்டம் : பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: ேதா்தல் அறிவிப்பு வரும் முன் ரூ.100 கோடியை செலவழிக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் பாஜ எம்எல்ஏவுமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.அரசின் இணையதளத்தில் திரட்டிய புள்ளிவிவர தகவல்களுடன் பாஜ எம்எல்ஏக்கள் ஓ.பி.சர்மா, ஜகதீஷ் பிரதான் மற்றும் ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்களும், சமீபத்தில் பாஜவில் இணைந்தவர்களுமான கபில் மிஸ்ரா, அனில் பாஜ்பாய், தேவேந்தர் ஷெராவத் ஆகியோருடன் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்து குப்தா கூறியதாவது:நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதுமாக பயன்படுத்த ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. நிதி பயன்படுத்துவதில் மிகவும் மெத்தனமாக அரசு இருந்துள்ளது. இப்படி இருந்தால் நலத்திட்ட பலன்கள் பயனாளிகளுக்கு எப்படி முழுவதுமாக கிடைக்கும்? மொத்த நிதி ஒதுக்கீட்டில் 23.63 சதவீதம் மட்டுமே அரசு செலவழித்து உள்ளது. 3ம் காலாண்டு தொடங்கி உள்ள நிலையிலும் வளர்ச்சி சார்ந்த திட்டங்களிலும் செலவினம் 20 சதவீதத்தை தாண்டவில்லை.

தொழிலாளர் நலத்துறைக்கு ₹321 கோடி ஒதுக்கி பட்ஜெட்டில் நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். அந்த துறை செலவிட்டு இருப்பது ₹3.17 கோடி மட்டுமே. ஒரு சதவீதத்திற்கும் குறைவாக செலவு செய்துள்ளனர்.விவசாயம் மற்றும் அது சார்ந்த சேவை துறைக்கு ₹163 கோடி அறிவித்தனர். அங்கும் ₹3.46 கோடி தான் செலவீடாக உள்ளது. (2.12%) வீட்டு வசதி துறைக்கு ஒதுக்கிய ₹133 கோடியில், திட்டங்களுக்கு வெறும் ₹10 கோடியை (7.52%) மட்டுமே அதிகாரிகள் செலவழித்து உள்ளனர்.சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்னும் 2 மாதத்தில் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்ப்பு உள்ளது. தேதி அறிவித்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும். பிறகு நிதியை பயன்படுத்த முடியாது. ஒதுக்கிய நிதியை செலவிட அரசு தள்ளாட்டம் போட்டால், நல திட்டங்களும், பணிகளும் எப்படி நிறைவேறும்? ஆம் ஆத்மி அரசு இதுவரை செலவு செய்திருப்பது 23.63 சதவீதம் மட்டும் தான். அப்படியானால் 76 சதவீத நிதி அம்போ தானா?மாநிலம் மற்றும் அதன் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற தயங்கும் ஆம் ஆத்மி அரசு, விளம்பரங்களுக்கு தாறுமாறாக செலவு செய்வதில் பிரியமாக உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குள் ₹100 கோடி செலவு செய்ய ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டு உள்ளது.இவ்வாறு குப்தா குற்றச்சாட்டு தொடுத்துள்ளார்.

Related Stories: