திருவனந்தபுரம் அருகே தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே தொழில் உறுதி திட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது ஒரு தொழிலாளியின் கழுத்தில் மலைப்பம்பு சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே நெய்யாறு அணை உள்ளது. இந்த பகுதியில் கேரள கூட்டுறவு மேலாண்மை கல்லூரி உள்ளது. இது வனப்பகுதியாகும். கல்லூரியை ஒட்டி புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. இதை அகற்றும் பணியில் நேற்று தொழில் உறுதி திட்டத்தை சேர்ந்த 55 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு புதருக்குள் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவருமாக மலைப்பாம்பை பிடிக்க முடிவு செய்தனர்.

சில தொழிலாளர்கள் சேர்ந்து மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட முயன்றனர். பாம்பை சந்திரன் நாயர் என்பவர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று மலைப்பாம்பு அவரது கழுத்தை பலமாக சுற்றியது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்து இழுத்தனர். ஆனால் பாம்பு பிடியை விடாமல் அவரது கழுத்தை நெரித்தது. மற்ற தொழிலாளர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பின் பிடியில் இருந்து சந்திரன் நாயரை விடுவித்து சாக்கு பையில் போட்டு கட்டினர். சந்திரன் நாயர் கழுத்தில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: