தமிழகத்தில் 33 பேர் உள்பட நாடு முழுவதும் ஐஎஸ் ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டது எப்படி? : தேசிய புலனாய்வு அமைப்பு பகீர் தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் அதிகபட்சமாக 33 பேர் உள்பட நாடு முழுவதும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என தேசிய புலனாய்வு அமைப்பு பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் செயல்படும் தீவிரவாத குழு ஐஎஸ். இந்த அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களில் அதிகம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இங்கு மட்டும் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, உத்தர பிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலங்கானாவில் 14 பேர், மகாராஷ்டிராவில் 12 பேர், கர்நாடகாவில் 8 பேர், டெல்லியில் 7 பேர், மேற்குவங்கம், உத்தரகாண்டில் தலா 4 ேபர், காஷ்மீரில் 3 பேர், ராஜஸ்தான், குஜராத்தில் தலா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர பீகார், மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 14 மாநிலங்களில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிமின் வீடியோக்களால் தீவிரவாதிகளாக மாறியதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈஸ்டர் தற்கொலை படை தாக்குதல் சம்பவத்தில் 12 இந்தியர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்பே தமிழகம், கேரளாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஐஎஸ் அமைப்பில் இணைந்தவர்கள் மலேசியாவில் இருக்கும் இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாயக் ஆற்றிய உரைகளால் ஈர்க்கப்பட்டு தீவிரவாதிகளாக மாறியதாக கூறப்படுகிறது.

ஜமாஅத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) தனது கூடாரங்களை இந்தியா முழுவதும் பரப்ப முயன்றதுடன், 125 சந்தேக நபர்களின் பட்டியலை வெவ்வேறு மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தீவிரவாத தடுப்பு படையின் (ஏடிஎஸ்) தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. மேலும் வங்கதேச குடியேறிகள் என்ற பெயரில் ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஜேஎம்பி தனது நடவடிக்கைகளை பரப்பியுள்ளதாக கூறப்பட்டதால் அந்த மாநிலங்களில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்தவர்களை என்ஐஏ கண்காணித்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு கடந்த 2014 முதல் 2018 வரை பெங்களூருவில் 20 முதல் 22 மறைவிடங்கள் அமைத்து ஐஎஸ் தனது தளங்களை தென்னிந்தியாவில் பரப்பி வந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மலைகளில் ராக்கெட் ஏவுகணை சோதனைகளை ஜேஎம்பி நடத்தியதாகவும் என்ஐஏ அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: