மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது: மற்றொருவருக்கு போலீஸ் வலை

புதுடெல்லி: பிதரமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளிடம் பணப் பையை பறித்து சென்ற 21 வயதான வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவரது மகள் தமயந்தி பென், நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் வடக்கு டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் குஜராத்தி சமாஜ் பன் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கினார்.  அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த பைக் ஆசாமிகள் இருவர், தமயந்தியிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.இது குறித்து தமயந்தி பென் போலீசில் புகார் அளித்தார். அந்த பையில் பணம் 56,000 மற்றும் இரண்டு செல்போன்கள் இருந்ததாக கூறி, அதனை மீட்டுத்தர கோரினார். உடனே, போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு  செய்ததில் இரு நபர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவனை நேற்று சோனிபட்டில் கைது செய்தனர்.

இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் மோனிகா பரத்வாஜ் (வடக்கு) கூறுகையில், ‘‘பிரதமரின் சகோதரர் மகளிடம் பணப்பையை திருடிச் சென்றவர்கள் குறித்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில்,  பைக்கில் ஹெல்மெட் அணியாத 2 நபர்கள் கைப்பையை தமயந்தி பென்னிடம் இருந்து பறித்து சென்றதை கண்டறிந்தோம். அவர்களில் டெல்லி சாதர்பஜாரில் வசிக்கும் கவுரவ் என்கிற நோனுவை, அரியானா மாநிலத்தின் சோனிபட் பகுதியில்  உள்ள அவனது உறவினர் வீட்டில் நேற்று கைது செய்தோம். இவனது கூட்டாளி பாதலை தீவிரமாக தேடி வருகிறோம். இதில், நோனு ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட சம்பவம் குறித்து புகார் பதிவாகியுள்ளது. ஆனால், வழக்குகள் ஏதேனும்  பதியப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அதுபற்றி ஆய்வு நடத்தி வருகிறோம்,’’ என்றார்.மோடியின் சகோதரர் மகளிடம்வழிப்பறி நடந்த இடத்தில் இருந்து ஒரு கிமீ தூரத்தில்தான் டெல்லிமுதல்வர் கெஜ்ரிவால், ஆளுநர் பைஜால் வசிக்கும் வீடுகள் உள்ளன.

Related Stories: