எம்ஜிஆர் ஆட்சியும் இல்லை, ஜெயலலிதா ஆட்சியும் இல்லை தமிழகத்தில் நடப்பது பாஜ ஆட்சிதான் : ஏர்வாடி பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை : தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியும் இல்லை, ஜெயலலிதா ஆட்சியும் இல்லை பாஜ ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்தை நேற்று துவக்கிய தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஏர்வாடியில் நேற்று மாலை திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: சிறுபான்மை மக்களுக்காக வாதாடுகிற இயக்கம் தி.மு.கழகம். அதற்காகதான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என இந்த கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளோம். 400 ஆண்டு கால பழமையான பாபர் மசூதியை இடித்து தள்ளியபோது எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் தலைவர் கருணாநிதி. ஆனால், பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து அதற்காக கரசேவகர்களை அனுப்பியது அதிமுக. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, உலமாக்கள் நலவாரியம் அமைத்து நல உதவி வழங்கியது அனைத்தும் தி.மு.க.  ஆட்சியில்தான். முத்தலாக் தடை சட்டத்தை பாஜக கொண்டு வந்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்ததும் தி.மு.க.தான். எனவே, ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் உங்களுக்காக போராடுகிற ஒரே இயக்கம் தி.மு.க.

தமிழகத்தில் ஆட்சியே இல்லை. காட்சிதான். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவைவிட 1.1 சதவீதம் ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா உடல் நலம் குன்றி இறந்து விட்டார். அவரது சாவில் மர்மம் உள்ளது என நீதி விசாரணை நடக்கிறது. பிறகு ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி என முதல்வராகினர். அவர்கள் அம்மா ஆட்சிதான் இங்கு நடக்கிறது என்கின்றனர். ஆனால், அம்மா ஆட்சியும் இல்லை, எம்ஜிஆர் ஆட்சியும் இல்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஜெயலலிதா ஆட்சி என்கின்றனர். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்ததா? இப்போது நுழைந்து விட்டது. அரசியல் ரீதியாக நமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியபோது இனிமேல் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரது பெயரை பயன்படுத்திக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர என்ன காரணம்?.

நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து மாண்டு போகும் நிலை உள்ளது. ஏழை, நடுத்தர குடும்பங்களில் பிறந்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்து விடும். தற்போது நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் மருத்துவபடிப்பில் சேர வேண்டிய நிலை வந்து விட்டது. எனவேதான் நீட் தேர்வு வேண்டாம் என குரல் கொடுக்கிறோம்.

அதேபோல், இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிப்பதுதான் பாஜகவின் கொள்கை. எந்த மொழியையும் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. தாய் மொழி தமிழுக்கு எந்த ரூபத்திலும் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகதான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் தபால் நிலையங்களில், ரயில் நிலையங்களில் மத்திய அரசு இந்தியில்தான் எழுதவேண்டும், தமிழில் எழுதக்கூடாது என்பதை தடுத்து நிறுத்தினோம்.

தமிழகத்தில் முதல்வரும் 31 அமைச்சர்களும் எந்த நேரத்திலும் ஆட்சி போய்விடும், இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பதால் சுருட்டி கொள்ளலாம், கொள்ளையடிக்கலாம் என்ற நிலையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதற்கு பாஜ துணை நிற்கிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கும் மத்திய ஆட்சிக்கும் சரியான பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: