மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: மதுரை ஆட்சியராக டி.ஜி.வினய் நியமனம்...தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்துத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜே.ராதாகிருஷ்ணன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்  துறை முதன்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை செயலாளராக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா, கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம்  செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலராக இருந்த தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த சந்தோஷ் பாபுவுக்கு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநராக  கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் இயக்குனராக இருந்த சுப்ரியா சாஹூ குன்னூர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக வினீத்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த டி.ஜி.வினய் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியராக டி.ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் 6 மாதங்களில் 4 கலெக்டர்கள் மாற்றம்:

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரத்தில், அப்போது, மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய நடராஜன் மாற்றப்பட்டார்.  தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாகராஜன் கலெக்டராக பொறுப்பு ஏற்றார். நேர்மையாக செயல்பட்ட நாகராஜன், அரசியல் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல், அங்கன்வாடி மைய ஊழியர்களை நியமித்தார். இதையடுத்து, அவரை இடம்  மாற்றி, அரசு உத்தரவிட்டது.

சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய ராஜசேகர், ஜூலை 1-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, அவர், திடீர் விடுப்பில் சென்றார். இந்நிலையில், அரியலூர் கலெக்டராக இருந்த  டி.ஜி.வினய், மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கடந்த 6 மாதங்களில் மட்டும் மதுரை மாவட்டத்திற்கு 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: